தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 81
சோழர் வரலாறு - முதற் பராந்தக சோழன்
முதற் பராந்தக சோழன்
(கி.பி. 907 - 953)
பராந்தகன் குடும்பம்: ஆதித்த சோழனது திருமகனான முதற்பராந்தக சோழன் ஏறத்தாழப் பன்னிரு மனைவியரைப் பெற்றிருந்தான். அவர்கள் கோக்கிழான் அடிகள், சேர அரசன் மகள் முதலியோர் ஆவர். பிள்ளைகள் - (1) இராசாதித்தன் (2) கண்டராதித்தன் (3) அரிகுல கேசரி (4) உத்தமசீலன் (5) அரிஞ்சயன் என்பவர். வீரமாதேவி, அநுபமா என்பவர் பெண்மக்கள் ஆவர். வீரமாதேவி என்பவள் கோவிந்த வல்லவரையன் என்னும் சிற்றரசனை மணந்திருந்தாள்; அனுபமா என்பவள் கொடும்பாளுர் முத்தரையனை மணந்திருந்தாள்.
இராசாதித்தன் தாய் கோக்கிழான் அடிகள்; அரிஞ்சயன் தாய் சேரன் மகளாவாள், அரிகுலகேசரி என்னும் இளவரசன் கொடும்பாளுர் அரசன் மகளான பூதி ஆதிக்க பிடாரி என்பவளை மணந்திருந்தான். இத்தகைய கொடுக்கல்-வாங்கல்களால் சேர அரசனும் முத்தரையரும் பராந்தகனுக்கு உறுதுணைவராக இருந்தனர். இவருடன் கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி உற்ற நண்பனாக இருந்தான். பராந்தகன் ‘பரகேசரி’ என்ற பட்டம் உடையவன்.
பாண்டிநாட்டுப் போர்:
முதற் பராந்தகன் பாண்டியருடனும் ஈழவருடனும் பாணருடனும் வைதும்பருடனும், இறுதியில் இராட்டிரகூடருடனும் போர் செய்ய வேண்டியவன் ஆனான். இவற்றுள் முதற்போர் பாண்டிய நாட்டுப் போராகும். பராந்தகன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்மன் ஆவன்.
பராந்தகன் பாண்டிய நாட்டைக் கைப்பற்ற விரும்பியே போர் தொடுத்தான். அப்போரில் பராந்தகனுடைய நண்பரான சேரன், முத்தரையர், பிற சிற்றரசர் பராந்தகருக்கு உதவி புரிந்தனர். இராசசிம்மன் தஞ்சை அரசனை நெய்ப்பூரில் தோற்கடித்தான். கொடும்பாளுரில் கடும்போர் செய்தான். வஞ்சி நகரைக் கொளுத்தினான். ‘நாவல்’ என்னும் இடத்தில் தென் தஞ்சை அரசனை முறியடித்தான்” என்று இராசசிம்மன் பட்டயம் பகர்கின்றது.
பாண்டிய நாட்டுப் போர் பல ஆண்டுகள் நடந்ததாகத் தெரிகிறது. ஆதலின் இரு திறத்தாரிடத்தும் வெற்றி தோல்விகள் நடந்திருத்தல் இயல்பே ஆகும். இப்போரைப் பற்றிப் பாண்டியருடைய சின்னமனூர்ப்பட்டயம், கங்க அரசனது உதயேந்திரப்பட்டயம், இலங்கை வரலாறாகிய மகாவம்சம் முதலியன கூறுதல் ஏறத்தாழ ஒன்றாகவே இருத்தல் கவனித்தற்குரியது.
முதற்போரில் இராசசிம்மன் தோல்வியுற்று மதுரையை இழந்தான். பராந்தகன் மதுரையைக் கைக்கொண்டான்; அதனால் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக் கொண்டான்[1]. மதுரையை இழந்த இராசசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான். அவ்விலங்கை வேந்தன் பெரும்படை திரட்டிப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். அப்படையின் துணை கொண்டு இராசசிம்மன் பராந்தகனை எதிர்த்தான். போர், வெள்ளுர் என்னும் இடத்திற் கடுமையாக நடந்தது. சோழன் பக்கம் பழுவேட்டரையர்,
கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து போர் செய்தான். சோழனது ஒருபகுதி சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப் பேரரையன் என்பவன்.[2] சோழ மன்னன் அப்பொழுது நடந்த கடும்போரில் அப்படையையும் வெற்றி கொண்டான்; பண்டு இலங்கைப் படைகளை வென்ற இராகவன் போலத்தான் இலங்கைப் படையை வென்றமையால், தன்னைச் சங்கிராம இராகவன் என்று அழைத்துக் கொண்டான். இறுதியாக ஈழப்படையின் தலைவனான சக்க சேனாபதி என்பவன் எஞ்சிய தன் சேனையைத் திரட்டி இறுதிப் போர் செய்ய முனைந்தான்; அப்பொழுது உண்டான கொடிய விட நோயால் இறந்தான்; படைவீரர் மாண்டனர்.
எஞ்சிய வீரர் ஈழநாடு திரும்பினர். வெள்ளுரில் நடந்த போரின் காலம் ஏறத்தாழக் கி.பி. 915 என்னலாம்[3]. இப்போரில் உண்டான படுதோல்வியால், இராசசிம்மன் இலங்கைக்கு ஓடிவிட்டான். பாண்டியநாடு முழுவதும் சோழன் ஆட்சிக்கு உட்பட்டது. களப்பிரரை முறியடித்துக் கி.பி. 575-இல் கடுங்கோனால் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு கி.பி. 915-இல் பராந்தக சோழனால் அழிவுற்றது.