நாளை உக்கிரமடையவுள்ள போராட்டம் குவிக்கப்பட்டுள்ள படையினர்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுகந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று அரசியல் கட்சிகளும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளைய போராட்டங்களில் கலந்துக்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிடலாம் என பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெவிக்கப்படுகிறது.
இதனால், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அரச தலைவர் மாளிகையை சுற்றி இரும்பு வேலிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரச தரப்பினரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் ஆயிரத்து 500 பேரும் இராணுவத்தை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.
இவர்களை தவிர வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் காவல் நிலையங்களில் இருந்து 3 ஆயிரம் காவல்துறையினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அரண்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு காவல்துறை அதிகாரிக்கு முப்படையை சேர்ந்த இரண்டு பேர் என்ற வீதத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒரு பாதுகாப்பு அரணில் 100 காவல்துறையினர் மற்றும் 200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.