ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழு நாடும் ஒத்துழைத்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டெழ முடியும்!
பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய ஒரே ஆளுமைமிக்க தலைவர் இவராகும் என்பதால் நாட்டின் எதிர்காலத்தை கருதி மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினால் ஒரு நாடாக நாம் மீண்டும் தலை நிமிர்ந்து செயல்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அவர் எடுத்திருந்த மோசமான தீர்மானங்களால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அவர் உட்பட்ட அவரது ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர்.
தவறான வரி கொள்கை, இரசாயண உரத்தை தடை செய்தமை, இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்தமை உட்பட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை மாத்திரம் காரணங்காட்டி அவர்கள் தமது பொறுப்புகளில் இருந்து விலக பார்த்தனர்.
ஆனால், நாட்டின் அந்நிய கையிருப்பு குறைந்ததால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால்தான் மக்கள் புரட்சி வெடித்தது.
ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில் நாட்டின் அந்நியக் கையிருப்பு 1.8 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
அவர் பொறுப்பேற்கும்போது வெறும் 300 மில்லியன் டொலர்கள்தாள் அந்நியக் கையிருப்பு இருந்தது. எனவே, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே அனுபவமுள்ள தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.
பதில் ஜனாதிபதியாக அவரது பணிகளை செய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் பொது மக்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் நாம் மீண்டும் பொருளாதார ரீதியாக ஸ்திரமான நாடாக முன்னோக்கி பயணிக்க முடியும் என்றும் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.