அகதிகளாக இடம்பெயரும் இலங்கை மக்கள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மேலும் சில இலங்கையர்கள் அகதிகளாக இந்தியாவை தஞ்சமடைந்துள்ளனர்.
வவுனியா - செட்டிக்குளத்தை சேர்ந்த 7 பேரே இவ்வாறு இந்தியாவின் - தனுஷ்கோடியை நேற்று(15) மாலை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்து மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதிலும் பொதுமக்கள் கடும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 109 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
அதன்படி, செட்டிக்குளத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (40) அவரது மனைவி ராஜகுமாரி (36), குழந்தைகள் குமரன் (13), வசி (10) மேலும் அதே பகுதியை சேர்ந்த குமரன் (38), அவரது மனைவி வதினி (30) மற்றும் அவர்களது குழந்தை பவின்யா (06) ஆகியோர் நேற்று தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடை பகுதியை சென்றடைந்துள்ளனர்.
தகவலறிந்து மணல் தீடைபகுதிக்கு சென்ற தனுஷ்கோடி மரைன் பொலிஸார் 7 இலங்கை தமிழர்களை கடலோர காவல்படையின் ஹேவர் கிராப்ட் படகு மூலம் தனுஷ்கோடி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.