ஆலயத்தில் கத்திக்குத்து - இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆலயத்தில் வருடாந்த ஊற்சவத்தின் போது ஆலயத்தில் இருவருக்கிடையே காவடி தொடர்பான வாக்குவாதம் முற்றியதை அடுத்து 27 வயது இளைஞன் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, காயமடைந்தவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது இளைஞனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.