போதைப் பொருளைப் பயன்படுத்தியே படையினர் மூர்க்கத்தனமாகத் தாக்கினர்
சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு எதிரில் தங்கியிருந்த போராட்டகாரர்களை தாக்குவதற்கு வந்த படையினர் அதிகளவில் போதைப் பொருளை பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
போராட்டகாரர்கள் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
படையினர் அனைவரும் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்தனர் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். அந்த சந்தர்ப்பத்தில் கதைத்துக்கொள்ள கூடிய நிலையில் எவரும் இருக்கவில்லை.
படையினர் அனைவரும் மிக மோசமான முறையில் நடந்துக்கொண்டனர். தாக்குதல் நடத்தும் போது அதிபர் செயலகத்திற்குள் இருந்த எமது பிள்ளைகளை காப்பற்ற சென்றோம்.
கிறிஸ்தவ மதகுருமாரும், பிக்குமாரும் சென்றோம். படையினரில் எவரும் அனுதாபம் காட்டவில்லை. சட்டத்தரணியை பொல்லுகளால் தாக்கினர். பெருந்தொகையான படையினர் வந்திருந்தனர்.
அவர்கள் தூள்(ஹெரோயின்) அடித்திருந்தனரா அல்லது ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்தனரா என்பது எமக்கு தெரியாது. அந்தளவுக்கு சிறிலங்கா படையினரின் நிலைமை மாறியுள்ளது.
அனைவரும் போதையில் இருந்தனர் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். ரணில் விக்ரமசிங்கவின் பாதாள உலகக்குழுவினர் செயற்படுவது போல் செயற்பட்டனர்.
இலங்கை படையினரோ, காவல்துறையினரோ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. இது மிக பாரதூரமான நிலைமை. மக்கள் விழிப்படைய வேண்டும். இந்த நாட்டில் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அகிம்சை வழியில் போராடினோம்.
போர் நடைபெற்ற காலத்தில் கூட நாங்கள் தூதரகங்களுக்கு எதிரில் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இப்படி நடக்கவில்லை. இது எண்ணிப்பார்க்க முடியாத நிலைமை எனவும் ஆனந்த சாகர தேரர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக படையினர் இதனை விட மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
எனினும் அதனை தென்னிலங்கை மக்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் படையினரின் அடக்குமுறை எப்படியானது என்பது தற்போது தென்னிலங்கை மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.