அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
பி.ப 5.20 மணி வரை இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டமைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2022.07.17ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனத்தின் மூலம் மேற்படி கட்டளைச்சட்டத்தின் IIஆம் பகுதியின் கீழ் இலங்கை முழுவதும் 2022.07.18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட பிரகடனத்தை மேற்கொள்வதற்கான காரணம் மக்களிடையே அமைதியைப் பாதுகாத்தல், பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு நடத்துவதற்காகவெனவும் அரசியலமைப்பின் 155வது உறுப்புரையின் 4வது துணை உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகவும் அப்பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய இந்தப் பிரகடனத்துக்கு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பெற்றால் ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தலாம். பதின்நான்கு நாட்களுக்குள் இந்தப் பிரகடனத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாவிட்டால் அது இரத்தாகும்.
அத்துடன், ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை அவசரகால நிலைமை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நீடிக்கப்பட முடியும்.