வழக்குப் பொருளான மோட்டார் சைக்கிளை வைத்திருந்த  கான்ஸ்டபிள் கைது!

Prathees
1 year ago
வழக்குப் பொருளான மோட்டார் சைக்கிளை வைத்திருந்த  கான்ஸ்டபிள் கைது!

திருடப்பட்டு கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் மோட்டார் சைக்கிளை தனது சொந்த பாவனைக்கு பயன்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொஹுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொஹுவல பொலிஸ் குற்றப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி மஹரகம சுப்பர் மார்க்கெட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

அதே பதிவெண் கொண்ட அதே மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச் சென்ற போது, ​​அவரைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, ​​அவர் கொஹுவல பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்தது என கொஹுவல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக பிரியதர்ஷன விதானகேவிடம் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையத் தளபதி இரகசிய விசாரணை நடத்தி, கான்ஸ்டபிள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், அது அவருக்குச் சொந்தமானது இல்லை என்றும் சில மணி நேரங்களில் உறுதி செய்தார்.

பின்னர், குறித்த கான்ஸ்டபிளிடம்மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையின் போது,

இவர் கல்கிஸ்ஸ  பொலிஸில் பணிபுரிந்த போது சீருடையில் வீதியில் பயணித்த போது இந்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் தனது சொந்த உபயோகத்திற்காக மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாக கான்ஸ்டபிள் குறிப்பிட்டுள்ளார்.

தவிர மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் குறித்தும், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய சந்தேக கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மலையக குற்றப் பிரிவில் கடமையாற்றிய போது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்கமின்மை காரணமாக கொஹுவளை பொலிஸாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.