தயாசிறி ஜயசேகர வீட்டிற்கான மின்சார கொடுப்பனவினை செலுத்த தவறியுள்ளார் - சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Kanimoli
1 year ago
 தயாசிறி ஜயசேகர வீட்டிற்கான மின்சார கொடுப்பனவினை செலுத்த தவறியுள்ளார் - சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது வீட்டிற்கான மின்சார கொடுப்பனவினை செலுத்த தவறியுள்ளதாக சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் சிறிலங்கா நாடாளுமன்றில் கஞ்சன விஜேசேகரவிற்கும், தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் இன்று விவாதம் சூடுபிடித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெற்ற போது அதில் உரையாற்றிய சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது வீட்டிற்கான மின் கட்டணத்தை செலுத்த தவறியதாக சுட்டிக்காட்டினார்.

தயாசிறி ஜயசேகர அமைச்சு பதவியிலிருந்து விலகிய போதிலும் அமைச்சர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எதிர்கட்சியை பிரதிநித்துவப் படுத்தினால், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை விடுத்து அரசாங்கம் வழங்கிய வீட்டை மீள வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே காஞ்சன விஜேசேகர தனது மின்சாரப் பட்டியல் தொடர்பான விடயங்களை ஊடகங்களில் கசிய விட்டதாக சாடினார்.

நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்கள் தாம் பயன்படுத்தியவை அல்ல என்று கூறிய தயாசிறி ஜயசேகர, குறித்த வீட்டை முன்னர் பயன்படுத்திய அமைச்சர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தான் கொழும்பில் வசிக்காத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வீடு ஒன்றை தனக்கு வழங்குமாறு பல முறை கோரிய போதிலும் அரசாங்கம் அதனை வழங்கவில்லையென குற்றம் சுமத்தினார்.

மேலும் தான் அமைச்சர் இல்லாமையினால் அரசாங்கம் வழங்கிய வீட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்ட போதிலும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களுக்கான இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறினார்.