இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது - அனுரா குமார திசாநாயக்க
இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது என்று அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka ) பாராட்டு தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க,
6 மாதங்களில் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும், 4 ஆண்டுகளில் சர்வதேச நிதியம் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியையும் ஒப்பிட்டு பேசினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி அளித்தது. இல்லையென்றால் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்' என்று தெரிவித்தார்.