அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Mayoorikka
1 year ago
அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் என்பன பற்றிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகவே டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி பொருளாதார ஸ்திரத்தன்மை, பிராந்தியப் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதும் வெளிப்படைத்தன்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான அரச நிர்வாகம் ஆகியனவற்றை அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து எவ்வாறு மேம்படுத்தமுடியும் என்பது குறித்தும்,

 இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்றும் இராஜாங்கத்திணைக்களம் குறிப்பிட்டிருந்தது. 

இவ்வாறான பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, பொருளாதார மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படல் ஆகியவற்றின் அவசியம் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அதேவேளை நாட்டிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்கள் குறித்தும் பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றமுடியும் என்பது குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.