அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 183 இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை அகதிகள், ஆறு முறைகேடான கடல்வழிகள் ஊடாக அவுஸ்திரேலியாவை அடைய முயற்சிப்பதாகத் தெரிவித்த ரியர் அட்மிரல், இலங்கையர்கள் கடலுக்குச் செல்ல முடியாத மீன்பிடிப் படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயல்வதாக சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை அடைய சுமார் 21 நாட்கள் எடுக்கும் என்று தெரிவித்த அவர், கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவை அடைய முற்படும் படகுகளை தடுத்து நிறுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.
படகுகளில் வருவோரை அவர்கள் புறப்பட்ட இடம் அல்லது தாய் நாட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்பவும் அல்லது தேவைப்பட்டால், அவர்களை ஒரு பிராந்திய செயலாக்க நாட்டுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.