அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த 183 இலங்கையர்கள், இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த 183 இலங்கையர்கள், இதுவரை திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த நாட்டின் கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகவர் பணிப் படையின் கட்டளை தளபதியுமான ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற ஆசிய கடலோர காவல்படை தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள், ஆபத்தான மீன்பிடி படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவை அடைய சுமார் 21 நாட்கள் ஆகின்றன.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவை அடைய விரும்புவோர் சட்டவிரோதமாக கடல்வழிப் பயணங்களை மேற்கொள்ளும்போது அதனை நிறுத்துவதுடன் அவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதாகவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவின் கேரளாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இடம்பெயர முயன்றதற்காக பலர் கைது செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.