போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதால் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா

Kanimoli
1 year ago
போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதால்  தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா

வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வலியுறுத்தியுள்ளார்.

அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச்சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றிற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், குறித்த விடயத்தினை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.