பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயது மாணவன்: திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பு
மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியால் சுடப்பட்டதில்இ மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மிதெல்ல கந்தபொல வீதியிலுள்ள இடமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்புருபிட்டிய பொலிஸ் ஜீப் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிடவில்லை என சம்பவத்திற்கு முகங்கொடுத்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.