இலங்கையில் ஆடுகளம் திரைப்பட பாணியில் தடுக்கப்பட்ட புறா பந்தயம்
ஆடுகளம் திரைப்பட பாணியில் இடம்பெறவிருந்த பறவை பந்தயம் ஒன்று வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டினால் நேற்று (03) தடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பறவை பந்தய கழகத்தின் ஏற்பாட்டில் காரைத்தீவு பகுதியில் நடத்தப்படவிருந்த புறாக்களை பந்தயத்தில் ஈடுபடுத்தி அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் போட்டியே இவ்வாறு தடுக்கப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 120 கிளைகளைக் கொண்ட அகில இலங்கை பறவை பந்தய கழகத்தின் கண்டி நகரத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் சிலர் 360 புறாக்களை காரைத்தீவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து விடுவிக்க முயற்சித்த தருணத்தில் அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கழகத்தின் உறுப்பினர் ஒருவர், தமது கழகம் இந்த போட்டியை கடந்த 8 வருடங்களாக நடத்தி வருவதாகவும், இந்த போட்டியை உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பறவைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய அவை விடுவிக்கப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.