இலங்கையில் 5.7 மில்லியன் பேருக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவை: UNDP அறிக்கை
இலங்கையிலுள்ள 5.7 மில்லியன் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், 6.3 மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டின் பின்னரான மிகவும் மோசமான நிலைமை இதுவென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த பொருளாதார பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதுடன், 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலுள்ளதாகவும் 6.3 மில்லியன் மக்கள் அடுத்த வேளை உணவை எங்கிருந்து பெறுவது என்பதை அறியாத நிலையில் தவிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவுவதற்காக கூட்டு நிதி சேகரிப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உணவு மற்றும் சுகாதாரத்துறையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், சத்திரசிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.