ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார்!
இலங்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை ஜனாதிபதி 30 ஆக அதிகரிக்க இடமுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்த்து அமைச்சரவை அமைச்சர்கள், 19 பேர் செயற்படுகின்றனர்.
இதனடிப்படையிலேயே புதிய அமைச்சரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனை தவிர ராஜாங்க அமைச்சர்களாக 38 பேர் செயற்படுகின்றனர்.
முன்னதாக, அரசாங்கத்தை முன்னகர்த்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை நிரப்புமாறு ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கும் பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றுக்கு தெரிவான தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவைக்குள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.