இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்ட 60 லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதி!
இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 லட்சம்; எண்ணிக்கையிலான கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகள் இந்த வாரம் காலாவதியாகின.
இதனால் இலங்கை அரசுக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தின் ஆரம்பத்தில் பலருக்கு முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படவில்லை. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் வடக்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மட்டுமே அந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், ஹேமந்த ஹேரத்தின் தகவல்படி, வைரஸுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதில் மக்கள் குறைந்த ஆர்வம் காட்டுவதால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை உரிய காலத்தில் வழங்கமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
82 லட்சம்; மக்கள் முதல் ஃபைசர் பூஷ்டரை (மூன்றாவது அளவாக) பெற்ற போதிலும், 202,571 பேருக்கு மட்டுமே இரண்டாவது பூஸ்டர் (நான்காவது அளவு) வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
காலாவதியான இந்த பூசிகளில் பெரும்பாலானவை சுகாதார அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டதாக வைத்தியர் ஹேரத் தெரிவித்தார்.