சீன சேதன பசளைக்கப்பலால், இலங்கைக்கு பாரிய நட்டம்!
இலங்கையின் இரண்டு அரச உர நிறுவனங்களும், சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமத்திற்கு, சேதனை பசளைக்காக 6.87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீதிமன்றத்தின் மத்தியஸ்தத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு முன்னர் செலுத்தியிருந்தன எனினும் இன்னும் அந்த சேதனப்பசளை இலங்கைக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த கொடுப்பனவு மாத்திரமல்லாமல், சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் இருந்து எழும் சில இழப்புக்களைத் தணிக்கக்கூடிய 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்களின் இரண்டு செயல்திறன் பத்திரங்களை மீட்டெடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒப்பந்தங்களை நிறைவேற்றாததற்கு எதிரான, கிங்டோவின் குறித்த இரண்டு செயல்திறன் பத்திரங்களும்; மார்ச் மாதத்தில் காலாவதியாகின. இதனையடுத்து, சீன நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீடு கோரிக்கைகளை இலங்கையின் அரச உர நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் அமைச்சர் அமரவீரவின் முன்மொழிவின் பேரில், முழுமையடையாத இந்த கொள்முதலுக்கான இராஜதந்திர அளவிலான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக, சீன சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில் குறித்த செயல்திறன் பத்திரங்களை பணமாக்குவதைத் தடுக்க சீன நீதிமன்றத்தின் மூலம் சீன நிறுவனமான கிங்டாவோ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.