நெருக்கடியில் இருந்து மீள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அவசியம்: பந்துல குணவர்தன

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டிற்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர்த்து, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நாடு அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அவசியம். உலகமயமாக்கலின் கீழ், உலகில் எந்த ஒரு நாடும் தனியாக வளர்ச்சியடைய முடியாது, ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் கட்டாயமாக ஒப்பந்தங்களை மேற்கொள்வது காலத்தின் அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், இவ்வாறான உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் தேவையான முன்நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



