குத்துச்சண்டை வீரர் கடத்தி தாக்கப்பட்டதன் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம்

கண்டியில் கடத்தி தாக்கப்பட்டு, வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவினால் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திறமையான குத்துச் சண்டை வீரராக அறியப்படும் 22 வயதுடைய மேற்படி இளைஞர், 10 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12ஆம் திகதி இரவு 8 மணியளவில் கண்டி, வைத்தியசாலை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியொன்றில் குறித்த இளைஞர் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட அவர் பின்னர் ஹந்தானை, ஹுலங்கபொல்ல பிரதேசத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக குறித்த இளைஞரின் தாயாருக்கு எதிராகவும் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
போகம்பரை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் ஒன்றினால் இவர் கடத்திச் சென்று தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



