அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் பழக வேண்டும்: ஜனாதிபதி

ஒரு தீவு நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடன் கையாள்வதில் இலங்கை நட்புறவு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசுகளின் போராட்டங்களில் ஒரு தரப்பினராக பிரிந்து நிற்காமல் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையை சர்வதேச உலகில் நல்லதொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தியத்தலாவ இராணுவ அகாடமியில் இடம்பெற்ற நிகழ்வில் இன்று (17) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
ஒரு நாடாக நாம் உலக வல்லரசுகளுடன் ஒன்றுபடவில்லை. உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஒரு தீவு நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்க வேண்டும்.
இந்த நாட்டை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. உள் மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன் உங்களிடம் உள்ளது. உங்களை உள்ளடக்கிய எங்கள் ராணுவத்துக்கு ராணுவ அனுபவம் உள்ளது.
மேலும் அவர்களுக்கு சர்வதேச போர் அனுபவம் உள்ளது. ஐ.நா படைகளுடன் இணைந்து மாலி அரசின் நடவடிக்கைகளில் நமது பாதுகாப்புப் படைகளும் பங்கு கொள்கின்றன.
அதனால் சவால்களை சமாளிக்க முடியும். எதிர்காலத்தில் வரக்கூடிய எந்த விதமான சவால்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றை வலுவாக எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு உள்ளது.
எனவே, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து, நீங்கள் அனைவரும் வலுவாக முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.



