இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் ஆரம்பம்

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என அதன் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் உரிய வகையில் கடமைகளை நிறைவேற்றியுள்ளனரா? என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாம் கட்டம் இந்த வாரம் தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை விரைவில் நிறைவுறுத்தி அது தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் மின் பாவனை பயன்பாட்டை குறைத்துள்ள சந்தர்ப்பத்தில் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதானது நியாயமான விடயம் அல்லவென மக்கள் சபை கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சபையின் அங்கத்தவர் ஓமல்பே சோபித்த தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மின்பாவனையை மேலும் குறைக்கக்கூடும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கை மின்சார சபைக்கு நட்டம் ஏற்படக் கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர் அத்துல தெரிவித்துள்ளார்.



