பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட T-56 துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற நபர் கைது
தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரால் பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் T-56 துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (02) வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்பத்து தேசிய பூங்காவில் வைத்தே இந்நபர் கைது செய்யப்பட்டதுடன் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றின் இறைச்சி, T56 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரினால், சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வேட்டைக்காரருக்கு இந்த துப்பாக்கி வழங்கப்பட்டதாக வனஜீவராசிகளின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் எண்ணுடனான விபரங்கள் அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தந்திரிமலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பொலிஸார் அங்குள்ள துப்பாக்கிகள் தொடர்பில் சோதனையிட்டனர்.
இதன்போதே வனவிலங்கு அதிகாரிகள் வழங்கிய T-56 துப்பாக்கியின் இலக்கம் கொண்ட துப்பாக்கி ஒன்று களஞ்சியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



