சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர்: 20 பேர் படுகாயம்!
ஜெர்மனி நாட்டில் டுசல்டார் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. இந்த தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் வேகமாக பரவி உள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களிலிருந்து வெளியேற முயற்சித்தனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிடத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் மறுபுறத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு பணியும் நடைபெற்றது.
இந்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிலரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீட்பு பணியின் போது பற்றி எறிந்த கட்டிடத்தில் இருந்து இறந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் அதன் உரிமையாளரே வெடிகுண்டு வீசியதாக கூறப்பட்டுள்ளது. எனவே போலீசார் கட்டிடத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.