புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விவகாரம்; எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க கூடாது என காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது. பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் மோடி அல்ல என கூறியிருந்தர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஜனாதிபதி லோக்சபா அல்லது ராஜ்யசபா இரண்டிலும் உறுப்பினர் அல்ல. எனவே ஜனாதிபதி ஏன் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்?, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு முழு தகுதியும் உள்ளது என கூறியுள்ளார்.