தங்கத்தை கொண்டு வந்த எம்.பி. திடீரென ஏன் அரசாங்கத்தை எதிர்த்தார்?

#SriLanka
Prathees
1 year ago
தங்கத்தை கொண்டு வந்த எம்.பி. திடீரென ஏன் அரசாங்கத்தை  எதிர்த்தார்?

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஜனாதிபதியோ பிரதமரோ தம்மிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாத காரணத்தினால் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.

 அந்த பொருட்கள் தன்னுடன் சென்ற நண்பருக்கு சொந்தமானது எனவும், தனக்கு தெரியாமல் பொருட்களை தனது சாமான்களில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும், விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளரிடம் பேசினாலும், தம்மை விடுவிப்பதற்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 அதன் காரணமாகவே பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

 அவை தம்முடன் இருந்த உறவினருக்கு சொந்தமானவை எனவும், எனவே சம்பவத்தின் போது ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரிடம் தமக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.