பரீட்சைகள் மாணவர்களின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும்! பரீட்சை திணைக்களத்தின் வசதிக்காக அல்ல: ஜனாதிபதி

கல்வி கற்கும் நாளாந்த சூழலை முற்றாக மாற்றியமைத்துள்ள பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாகவும், அதற்காக கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் எப்போதும் உழைக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இதன்படி 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தகுதி பெற்ற பாடசாலை இருந்தால், பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் வசதிகளை ஏற்படுத்தித் தருமாயின் அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கல்விப் பொதுச் சான்றிதழ் 2023 தேர்வில் 3,568 மையங்களில் 472,553 மாணவர்கள் தோற்றினர். அதற்காகப் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40,000.
ஆனால் இம்முறை பல பாடசாலைகளின் மாணவர்களை தாம் கல்வி கற்கும் பாடசாலைக்கு பதிலாக வேறு பாடசாலையின் பரீட்சை நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்வதால் பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்வதாக பெற்றோர்களும் பிள்ளைகளும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராயும் போது கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பரீட்சை நிலையங்களை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை மாணவர்களின் மன மட்டத்தை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பிள்ளைகளின் கல்விக்காக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் தாமதமின்றி நடாத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் அவசியமானது எனவும், அவை நடத்தப்படாமைக்கான காரணங்களைக் கூறுவது பரீட்சை திணைக்களத்தின் பணியல்ல எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.



