அபிவிருத்தியை நோக்கி இலங்கையை இட்டுச் செல்வேன்; ஐ.நாவில் ஜனாதிபதி உறுதி
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அனைவருக்கும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உறுதிசெய்து நிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கையை இட்டுச் செல்வதாக என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
பல தசாப்தங்களாக வறுமை மற்றும் பசியின் அளவு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதால், 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையான மாற்றம் ஏற்படும் என உறுதியளித்தார்.
உலகளாவிய தெற்கில் உள்ள இலங்கை போன்ற மிதவாத நாடுகள், மாறிவரும் உலகளாவிய சக்தி இயக்கவியலின் மத்தியில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
உலகளாவிய சக்தி மோதல்கள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை சேர்க்கின்றன, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, உலகம் முழுவதும் பணவீக்கம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை போன்ற சிறிய கடனாளி நாடுகளுக்கு நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் காலநிலை முயற்சிகளை முன்னெடுப்பதற்கு காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற நெருக்கடிகள் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.