இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலி
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. மூன்று மாதங்களை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனான் தெற்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல்-டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனானின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இது ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆத்திரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல்- காசா இடையிலான சண்டை மத்திய கிழக்கு போராக விரிவடையும் என அச்சம் நிலவுகிறது.
அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் இருந்து சுமார் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.