எரிபொருள் பேக்குவரத்து கப்பல் மாயம் - சூடுபிடித்துள்ள வளைகுடா பகுதி!
காஸா போர் காரணமாக செங்கடலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில் வளைகுடா பகுதியும் இன்று சூடுபிடித்துள்ளது.
அரபிக்கடலில் ஓமான் வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் போக்குவரத்துக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.
கிரேக்க நிறுவனமொன்றுக்கு சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுவனத்தின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி, ஆயுதம் தாங்கிய குழுவொன்று கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது கப்பலில் 19 பணியாளர்கள் இருந்ததாகவும், ஆயுதம் தாங்கிய குழு கப்பலுக்குள் நுழைந்ததையடுத்து, கப்பல் ஊழியர்களுடனான அனைத்து உறவுகளும் முறிந்ததாகவும் குறித்த நிறுவனத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் அறிக்கைகளின்படி, கப்பலில் இருந்த பணியாளர்களில் 18 பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு கிரேக்கர் இருந்துள்ளனர்.
ஈரானின் பஸ்ராவில் இருந்து துருக்கி நோக்கி, எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
05 அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய நபர்கள் கப்பலுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இராணுவ சீருடை போன்ற உடை அணிந்து வாயை கருப்பு முகமூடியால் மூடியிருந்ததாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயுதம் தாங்கிய குழு அதன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் போது கப்பல் ஈரான் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.