தேர்தலுக்காக ராணுவத்தை களமிறக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கலைத்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து அன்வர் உல் ஹக் காகர் காபந்து பிரதமர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த சூழலில் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் காகர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவத்தை நிலைநிறுத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் பொதுத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் சிவில் ஆயுதப் படைகளின் வீரர்களை அனுப்ப மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் படைகள் பதற்றம் நிறைந்த தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் தங்கள் கடமைகளைச் செய்யும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.