அமெரிக்காவில் கொலை குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை
கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher). பிரின், "அக்கவுன்டன்ட்" பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O'Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார்.
பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர். 2018 மே மாதம், தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார்.
அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார். அந்நிலையில் அவருக்கும் ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்திலும், போதை மருந்தின் மயக்கத்திலும், என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார்.
இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா. தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன், கையில் கத்தியை பிடித்தவாறு, அழுது கொண்டே இருந்தார் பிரின்.
நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பிரின் தரப்பு வழக்கறிஞர்கள் போதை மருந்தின் தாக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர் கொலை செய்து விட்டதாக வாதிட்டனர்.
இந்நிலையில், வென்சுரா கவுன்டி நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடே இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை வழங்காமல், 2 வருட "ப்ரொபேஷன்" (ஒரு நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையில் வாழுதல்) மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் சாட் ஒமேலியாவின் தந்தை ஷான் ஒமேலியாவிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார், பிரின்.