தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை சுட்டுக்கொன்ற அமெரிக்க மார்ஷல்ஸ் படை
அமெரிக்காவின் நீதி துறைக்கு கீழ் இயங்கும் சட்ட ஒழுங்கு காவல்துறை, "யு. எஸ். மார்ஷல்ஸ்" (US Marshals) படை.
நியூயார்க் மாநிலத்தின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்தவர், 41 வயதான ஷமார் லெக்கெட் (Shamar Leggette).
வங்கி கொள்ளை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் ஷமார். 2022ல் புரூக்ளின் நகரத்தை சேர்ந்த பிஷப் லேமர் வைட்ஹெட் என்பவரிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் மதிப்புடைய நகைகளை திருடியதாக அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த வழக்கு "ப்ளிங்க் பிஷப்" என மிக பிரபலமாக அழைக்கப்பட்டது. குயின்ஸ் பகுதியில் கொலை மற்றும் $7000 பணம், ரோட் ஐலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் $50,000 மதிப்புள்ள நகை கொள்ளை ஆகியவை அவர் மீது இருந்த பிற முக்கிய வழக்குகள்.
இந்நிலையில், நியூ ஜெர்சி மாநில மான்மவுத் ஜங்க்ஷன் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் இருந்த அவரை யு.எஸ். மார்ஷல்ஸ் கைது செய்ய சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஷமார், மார்ஷல்சை நோக்கி சுட்டு கொண்டே வெளியே ஓடினார்.
வேறு வழியின்றி தற்காப்புக்காக மார்ஷல்ஸ் அவரை நோக்கி சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.
நியூ ஜெர்சி நீதி துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.