புலம்பெயர்ந்தோரை நாட்டில் தங்க வைக்க அல்பேனியா ஒப்புதல்
வட ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு போர் நடைபெற்றது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர்.
இதனால் நடுக்கடலில் படகு கவிந்து உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்தன. மத்திய தரைக்கடல் கரையோர நாடான இத்தாலிதான் இவர்களை வரவேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் அவர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி வந்தது. ஆனால் வருடத்திற்கு வருடம் புலம்பெயர்வோரின் வருகை அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த சிக்கலை தீர்க்க இத்தாலி அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி அல்பேனியாவும் புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பம் கொடுப்பவர்களை ஏற்றுக் கொள்ளலாம்.
இதனால் இத்தாலியின் சுமை ஓரளவு குறையும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை அல்பேனிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்றபோதிலும் இன்று பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. என்றபோதிலும், போதுமான வாக்குகள் பதிவாக பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.