காசாவில் உதவி பொதிகள் வீசப்பட்டதில் ஐவர் உயிரிழப்பு!
காசா பகுதியில் வான்வழியாக வீசப்பட்ட உதவிப் பொதி கீழே விழுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவியை ஏற்றிச் சென்ற பாராசூட் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் சமீப நாட்களில் காசா பகுதிக்கு விமான உதவி வழங்க முன்வந்துள்ளன.
அமெரிக்காவும் ஜோர்டானிய விமானப்படையும் இணைந்து அண்மையில் காசா பகுதிக்கு வான் உதவிகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது விமானம் ஒன்றினால் விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது என ஜோர்டான் தெரிவித்துள்ளது.
காசாவின் 2.3 மில்லியன் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் பட்டினியால் இறப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில், காசா பகுதிக்கான உதவிகள் கடல் வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.