இந்தியாவை எதிர்த்ததால் சுற்றுலாதுறை பாதிப்பு - மாலத்தீவு முன்னாள் அதிபர்
இந்தியாவுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
மேலும் லட்சத்தீவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடன் மோதல் போக்கால் மாலத்தீவில் சுற்றுலா கடுமையாக பாதித்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தியாவுடன் மோதல் போக்கு, மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்களும் வருந்துகிறார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
இது நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்திய மக்களிடம் மாலத்தீவு மக்களின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன். விடுமுறை நாட்களில் இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர விரும்புகிறோம்.
எங்கள் விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது. மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, இந்திய ராணுவ வீரர்களை வெளியேறச் சொன்னபோது, இந்தியா மாலத்தீவு அரசாங்கத்திடம் நாம் விவாதிப்போம் என்று கூறியது.
இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் இந்தியா வரலாற்றுப் பொறுப்பான அணுகுமுறையை கொண்டுள்ளது.