இந்தோனேசியாவில் விமானம் வானில் பறக்கும்போது தூங்கிய விமானிகளால் சர்ச்சை!
இந்தோனேசியாவில் உள்ளக விமானத்தில் பயணித்த விமானம் ஒன்றின் இரண்டு விமானிகள் விமானம் பறக்கும்போது தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல 'பாட்டிக் ஏர்' விமானம் சுலவேசி விமான நிலையத்தில் இருந்து ஜகார்த்தா விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இது ஜனவரி 25 அன்று நடந்தது, அந்த நேரத்தில் விமானத்தில் 153 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
இதன் விளைவாக, ஏர்பஸ் ஏ320 விமானம் சிறிது நேரம் திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து திருப்பி விடப்பட்டது, ஆனால் விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
ஆனால் அந்த இரண்டு விமானிகளுக்கும் எதிராக விசாரணையை தொடங்க அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
32 வயதான தலைமை விமானி, விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, தனக்கு ஓய்வு தேவைப்படுவதால், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு துணை விமானியிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை விமானி ஒப்புக்கொண்டார். ஆனால் அப்போது துணை விமானியும் தூங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகளின் நடவடிக்கைகளில் மனைவிக்கு உதவியாக இருந்ததால் சரியாக தூங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.