மெலஸ்மாவால் ஏற்படும் பாதிப்பை குறைக்க வைத்தியர்கள் வழங்கும் தீர்வு!
புவி வெப்பமயமாதல் காரணமாக கோடை காலம் தவிர்த்த ஏனைய பருவ காலங்களிலும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என சுற்றுப்புற சூழல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாக பெண்களில் 90 சதவீதத்தினருக்கும், ஆண்களில் 10 சதவீதத்தினருக்கும் மெலஸ்மா எனப்படும் தோல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு தற்போது லேசர் தெரபி மூலம் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மெலஸ்மா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையினதான பாதிப்பாகும். இது குறிப்பாக முகத்தில் உள்ள கன்னங்கள், நெற்றி, மூக்கின் பகுதி, மேல் உதடு.. ஆகியவற்றில் பழுப்பு அல்லது சாம்பல் நிற திட்டுகளை உருவாக்குகிறது. சிலருக்கு இது கைகள் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளி அதிகமாக படும் பகுதிகளிலும் தோன்றுகிறது. சில பெண்மணிகளுக்கு அவர்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கான காரணம் துல்லியமாக அவதானிக்கப்படவில்லை என்றாலும், இவை பல காரணிகளை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. குறிப்பாக சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் தோலின் நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் என்னும் ஹோர்மோனின் உற்பத்தியை இயல்பான அளவிலிருந்து கூடுதலாகவோ அல்லது இயல்பான அளவிலிருந்து குறைவாகவோ தூண்டுகிறது. இதன் காரணமாக மெலஸ்மா திட்டுகள் உருவாகிறது. இவை பெரும்பாலும் சூரிய ஒளியில் தோன்றுகிறது.
வேறு சிலருக்கு ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், சிலர் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிற்காக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு மரபியல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மெலஸ்மா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக கிறீம்கள் மூலம் முதன்மையான நிவாரணம் அளிக்கப்படுகிறது. சிலருக்கு இதன் போது பிரத்யேக லேசர் தெரபி மூலமாகவும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்தகைய பாதிப்புள்ள இளம் பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதில் பாரிய இடையூறை ஏற்படுத்துவதால், இதற்கான சிகிச்சையை பெற்று நிவாரணம் பெறுவது தான் சரியான தீர்வாகும்.