45 வயது இயக்குனருக்கு ஜோடி போடும் சினேகா..
தமிழ் சினிமாவில் என்னவளே படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. இதனை தொடர்ந்து தமிழில் ஆனந்தம், புன்னகை தேசம், வசீகரா, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.
பின்னர் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகா சில காலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் தற்போது குழந்தைகளை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். குழந்தைகள் படம் என்பதால் படத்திற்கு ஷாட் பூட் 3 என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் இப்படம் மூலம் பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தான் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இவர்களுடன் நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
முன்னதாக ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதேபோல் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்திலும் நடிகை சினேகா நடித்திருப்பார். இருப்பினும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.