எரிபொருள் நிலையங்களில் கடும் வாகன நெரிசல்!

Keerthi
2 years ago
எரிபொருள் நிலையங்களில் கடும் வாகன நெரிசல்!

புத்தளத்தில் பெற்றோலுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் கிடையாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கமன்பில தெரிவித்திருந்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதனை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, புத்தளத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றிரவு பெரும் எண்ணிக்கையிலானோர் பெற்றோல் நிரப்புவதற்கு வருகை தந்திருந்தனர்.

இதனால், கடும் வாகன நெரிசல்ளும் காணப்பட்டன.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் என்பனவற்றுக்கு பொற்றோல் நிரப்பியதுடன், பலர் போத்தல்களிலும் எடுத்துச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

அமைச்சர் தெரிவித்த கருத்தை அடிப்படையாக கொண்டு, முகநூல் ஊடாக வெளியான வதந்தியான தகவல்களை அடுத்தே, இவ்வாறு வாகன சாரதிகளும், பொது மக்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்புவதற்கு நீண்ட தூரம் வரிசையில் நின்றனர்.

எனினும், இன்று நள்ளிரவு போதுமான அளவு பெற்றோல் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படும் எனவும் இதனால் பெற்றோலுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இருக்காது எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் தற்போது இரு வாரங்களுக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கமன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.