இன்றைய வேத வசனம் 24.05.2022: தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்
உலகில் பல புத்தகங்கள், பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்டு பலரால் வாசிக்கப்படுகிறது. சிலர் பிரயோஜனமடைந்து அறிவைப் பெறுகிறார்கள்.
ஆனால் படிக்கும்போது நம்மோடு பேசும் ஒரே புத்தகம் வேத புத்தகம் மட்டுமே. அது மட்டுமின்றி ஒருவரின் வாழ்க்கையில் மறுரூபத்தையும், மாற்றத்தையும் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையில் அற்புதத்தையும், அதிசயத்தையும் செய்யும் அளவிற்கு வல்லமையுள்ள புத்தகம் வேத புத்தகம்.
காரணம் இது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க ஆவியானவரின் தூண்டுதலினால் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை. இதன் வல்லமை, வாசிப்பவர்கள் எந்த கஷ்டத்தின் சூழ்நிலையிலிருந்தாலும் அவர்களுக்கு ஆறுதல் தந்து அவர்களை பெலப்படுத்தி மறுபடியும் நம்பிக்கையோடு வாழ வைக்கிறது.
அதே நேரம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று உபதேசித்து, தவறும் போது கடிந்துகொண்டு, தள்ளாடும் போது தோள் கொடுக்கும் துடுப்புப் போன்றது. நீதியாய், ஒழுக்கமாய், பரிசுத்தமாய் நடக்க நீதியை படிப்பிக்கிறது (1 தீமோ 3:17)
குறிப்பாக வாலிபர்கள் தங்களை பரிசுத்தமாய் காத்துக் கொள்ள, இந்த தேவனுடைய வார்த்தை அவர்கள் இருதயத்தில் வைத்தால், சாத்தானை எளிதாக ஜெயிக்க முடியும். அந்த அறவிற்கு வல்லமையுள்ள ஆயுதம் என்றார் தாவீது ராஜா.
ஒருநாள் தேவனுடைய வார்த்தையாகிய வேதத்தை வாசிக்காவிட்டால் நான் பல்பிடுங்கப்பட்ட சிங்கம்போன்றவன் என்று ஒரு தேவ மனிதர் கூறுகிறார்.
தான் நடந்து செல்லும் பாதையில் பல பாவங்களும் , சோதனைகளும் நெடுக இருந்தாலும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தால், தன் வழியை சுத்தமாக காத்துக் கொள்ள முடிகிறது.
இந்த தேவனுடைய வார்த்தை சத்தியம், இதை நம்பும்போது, நாம் பொய்களுக்கு விலகி நிச்சயம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும்.
உன்னுடைய அஸ்திபாரம் தேவனுடைய வார்த்தையாகிய வசனத்தின் மேல் இருந்தால், எந்த பெருமழை பெய்தாலும், பெருவெள்ளம் வந்தாலும், காற்றடித்தாலும் நீ அசைக்கப்படுவதில்லை (மத்தேயு 7:25)
அநேக நேரம் வேதம் வாசிப்பது நமக்கு ஒரு time waste போல தோன்றுகிறது. படித்தால் புரியாதது போல் தோன்றுகிறது. அது ஒரு சுத்த பொய்.
என்னுடைய வாழ்க்கையில் சாத்தான் என் மனதில் வைத்த காரியம் என்னவென்றால் இந்த கறுப்பு புத்தகம் படித்தால் புரியாது. பல வரலாறு அடங்கியிருக்கும். ரொம்ப bore, நீ படிக்காதே தூக்கம் வரும் என்று நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை என்னை ஏமாற்றி வைத்திருந்தான்.
பலநேரம் கடமைக்காக வாசிப்பேன், பெற்றோரின் வற்புறுத்துதலால் வாசிப்பது போல் நடிப்பேன். ஆனால் முதன் முதலில் அப்போஸ்தலர் 1:8 வாசித்த போது சற்று ஆறுதலாக இருந்தது.
என்னால் பெலனடைய முடியுமா? என்று யோசித்து பிறகு ஆசையாய் வாசிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு தான் இந்த வேதத்தின் வல்லமையைப் புரிந்து கொண்டு சுமக்க ஆரம்பித்தேன். இன்று வரை இந்த தேவனுடைய வார்த்தை என்னை பெலப்படுத்தி, உயிர்ப்பித்து, ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இதை வாசிக்கும் நண்பர்களே! இந்த தேவனுடைய வார்த்தை உங்களை உண்டாக்கியவர் உங்களுக்காக எழுதிய அன்பு கடிதம். உங்கள் வாழ்க்கையை சீர்படுத்தி, சீரமைக்க தினமும் ஆசையாய் வாசியுங்கள்! ஆண்டவர் உங்களோடு பேசுவார். ஆமென்!!!
எபிரெயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.