ரணிலின் வருகை நாட்டுக்கு ஆறுதல்: பெங்கமுவே நாலக தேரர்
ரணில் விக்கிரமசிங்கவின் வாரிசு ஜனாதிபதியாக வருவதானது இந்த நேரத்தில் நாட்டுக்கு ஆறுதல் அளிக்கும் என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என வினவிய போது அவர் மேலும் கூறியதாவது:
தேர்தலுக்கு முன்னரே, நான் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, முதிர்ந்த அரசியல் நுண்ணறிவு கொண்ட ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சரியான வேட்பாளர் என்பதை விளக்கினேன்.
மேலும், அவர் பதவியேற்ற பிறகு செய்ய வேண்டிய முக்கிய விஷயம், நீண்டகாலமாக கடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுதான்.
தற்போது, எரிபொருள் வரிசையில் இருபதாவது மரணம் பதிவாகியுள்ளது. தாய்மார்கள் எரிவாயுவுக்காக பல நாட்களாக வரிசையில் நிற்கின்றனர்.
மண்ணெண்ணையை வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியப் பொருளாகக் கொண்ட தோட்ட மக்களைப் போன்று கொழும்பின் வரிசை வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாழும் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பில் இருந்து உணவு தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.