நாட்டை விட்டு தப்பி ஓடுவது தான் தற்போது இலங்கையிலுள்ள பிரதான பிரச்சினை - சம்பிக்க ரணவக்க
மக்கள் படகு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடுவது தான் தற்போது இலங்கையிலுள்ள பிரதான பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் தலைவர்களாக வரவிருந்த குமரன் பத்மநாதன் (கே.பி), ராம் ஷாம் நகுலன், கருணா அம்மான் (நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்) போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கும் போது முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை சிறையில் அடைக்கக் கூடாது. எனவே, தடுப்புக் காவலில் உள்ள மீதமுள்ள 31 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
மேலும், பாதுகாப்பு படையினரையும் விடுவிக்க வேண்டும். இவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
தற்போது நாட்டிலுள்ள பிரதான பிரச்சினையாக, இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ், சிங்களம் என்ற பாகுபாடின்றி மக்கள் படகு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடுவது தான் என குறிப்பிட்டுள்ளார்.