இன்றைய வேத வசனம் 16.12.2022: உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
தன் மனைவியைப் பிரியப்படுத்த, அவள் சொல் கேட்டு, தன் பெற்றோரை புறக்கணித்தான் , ஒரு குடும்பத் தலைவன்.
வயது முதிர்ந்த அவனது பெற்றோர், கடைசியில் அவன் வீட்டையே நாடி வந்தனர். ஆனால் அவனோ தன் மனதை கடினமாக்கி, அவர்களை வீட்டிற்குள்ளேயே வரவிடாமல், வீட்டு வெளித் திண்ணையிலே வைத்து ஒரு மண் சட்டியில் கஞ்சி ஊற்றி வந்தான்.
ஒரு நாள் அந்த மண் சட்டியைக் காணோம். "கிழட்டுப் பயலே! அந்த சட்டியை எங்கே தொலைத்தாய்?" என்று சொல்லி, தகப்பனை அடிக்கப்போனான், குடும்பத் தவைவன்.
"அப்பா, அப்பா, தாத்தாவை அடிக்காதீர்கள். நான் தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன். நான் பெரியவன் ஆகும் போது உங்களுக்கு அந்தச் சட்டியில் தானே கஞ்சி ஊற்ற வேண்டும்? உங்களுக்காகதான் அதைப் பத்திரப்படுத்தினேன்'' என்றானாம், சிறுவன்.
அந்த வார்த்தைகளினால் தகப்பன் அதிர்ந்து போய்விட்டான். தலையில் சம்மட்டிக் கொண்டு அடிப்பது போல் இருந்தது.
"நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்" என்கிறது வேதம்! (லூக்கா 6:38 ).
மட்டுமல்ல, வேதம் எச்சரிக்கிறது, "தன் தகப்பனையும், தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்" (நீதிமொழிகள் 20:20).
"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" (#யாத்திராகமம் 20:12)