இன்றைய வேதவசனம் 19.04.2023: பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்
நமக்காகவே பூமியில் பிறந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழாவை கொண்டாடுகிற உங்கள் அனைவருக்கும் மிகுந்த சமாதானமும் சந்தோஷமும் உண்டாவதாக.
நாம் சந்தோஷப்படும் பொழுது, வறுமையிலும் பஞ்சத்திலும் வாழ்பவர்களை நினைத்து அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து அவர்களையும் சந்தோஷப்படுத்துவோமாக.
நாம் இயேசு கிறிஸ்துவில் களிகூறுவதுபோல பிறரையும் அவர் மூலமாகவும், அவர் நமக்குக் கற்றுக் கொடுத்த ஒப்பற்ற அன்பின் மூலமாகவும் சந்தோஷப்படுத்துவது நம் மேல் விழுந்த கடமையாகும்.
அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே எப்போதும் உதவும் (#கலாத்தியர் 5:6)
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பாரம்பரிய விழாவாகக் கொண்டாடாமல், கிறிஸ்துவின் அன்பினால் ஏவப்பட்டவர்களாக அர்த்தமுள்ள பயனுள்ள விழாவாக அனுசரிப்போம்.
இந்தக் கோடைக் காலத்தில் பலவித வியாதிகளால் பாடுப்படுகிற ஜனங்களுக்கு நன்மைச் செய்யப் பிரயாசப்படுங்கள்.
அவர்களுக்காக ஜெபியுங்கள். ஆடை மற்றும் உணவு இல்லாதவர்களுக்கு உதவி கரம் நீட்டுவது, அவர்களுக்கு இயேசுவின் அன்பை கூறுவது உயிர்த்தெழுதல் திருவிழாவின் காலத்தில் நாம் செய்யும் நற்செயல் ஆகும்.
35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். (#மத்தேயு 25:35,36)
என்று ராஜாவாகிய கர்த்தர் இயேசு தமது வலது பக்கத்தில் நிற்கும் பரிசுத்தவான்களைக் குறித்துப் பேசுகிறார்.
மேற்சொல்லப்பட்ட வசனங்களை சற்று ஜெபத்துடன் தியானித்து, இந்த பண்டிகை நாட்களை தேவனுக்கென்று பிரயோஜனமாக்கிக் கொள்ளுங்கள். ஆமென்!! அல்லேலூயா!!!