இன்றைய வேத வசனம் 25.04.2023: உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்
இன்று, கவலையில்லாத மனிதர்களை காண்பது அரிதாக இருக்கிறது! உங்கள் உள்ளத்திலும் இன்று ஏதோ ஒரு கவலை அழுத்திக் கொண்டிருக்கிறது.
வெளியே மகிழ்ச்சியாயிருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், உங்கள் இருதயத்தில் ஒரு கவலை, பாரமாக உங்களை அழுத்திக் கொண்டிருக்கிறது.
கவலை வந்து விட்டால், சாப்பிட மனம் வராது! தூக்கம் வராது! இரவெல்லாம் அதை நினைத்து, நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம். யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருப்போம். சிலர் படுக்கையை தங்கள் கண்ணீரினால் நனைத்துக் கொண்டிருப்பார்கள்.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்? என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன பாவம் செய்தேன்? இதற்கு ஒரு முடிவே வராதா?" என்று பல கேள்விகள் உள்ளத்தில் எழும்பும். ஆனால் பதில் கிடைக்காது.
சிலருக்கு, தன்னைக் குறித்து கவலை!
சிலருக்க 'வியாதி', 'கஷ்டங்கள்', 'பிரச்சனைகள்' என்று தன்னைக் குறித்தே வேதனைகள்!
சிலருக்கு, "ஏன் என் கணவர் இப்படியிருக்கிறார்? ஏன் என் மனைவி இப்படி இருக்கிறாள்? என் பிள்ளைகள் ஏன் இப்படியிருக்கிறார்கள்?` என்று குடும்பத்தை நினைத்து கவலை!
சிலருக்கு எதிர்காலத்தைக் குறித்த கவலை! சிலருக்கு, "வருமானம் போதுமானதாக இல்லையே?எப்படி வாழப் போகிறோம்? இந்தத் தேவைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்? நம்பிக்கையான ஒரு வழியும் தெரியவில்லை! நமக்கு உதவி செய்யவும் யாரும் இல்லையே!" என்று வனாந்திரத்தில் தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வு!
இப்படியாக, ஏதோ ஒரு காரியத்திற்காக கவலைப்பட்டு, கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?
"என் பிள்ளைகளே, கவலைப்படாதிருங்கள்! " என்று உங்களைப் பார்த்து ஒருவர் சொல்கிறார்.
சொல்கிற அவர் உங்கள் கவலையை மாற்ற வல்லமை உள்ளவர்! உங்கள் கவலையை மாற்ற அற்புதம் செய்யக் கூடியவர்! அவர்தான் உங்களையும், இந்த முழு உலகத்தையும் உண்டாக்கிய சர்வு வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!
அவர் சொல்கிறார் ‘'...என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்:.." (மத்தேயு 6:31,34) என்று.
அதாவது, "நீங்கள் ஒன்றைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள்." என்று அவர் உங்களுக்குச் சொல்கிறார்.
ஏன் தெரியுமா? கவலைப்படுவதினால் உங்கள் பிரச்சனைகள் மாறி விடுமா? இல்லையே! அப்படியானால், கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?
கவலைப்படுவதினால் உங்கள் மனதும், உடம்பும் பாதிக்கப்பட்டு வியாதிதான் வரும்! டக்டர்களிடத்தில் போனால் "நீங்கள் கவலைப்படுவதினால்தான் இந்த வியாதி வருகிறது !" என்று சொல்வார்.
அதனால்தான் இயேசு கிறிஸ்து 'என் மக(னே)ளே... நீ கவலைப்படாதே!' என்று உங்களுக்குச் சொல்கிறார்.
“இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது கவ்லைப்படாமல் எப்படி இருக்க முடியும்?" என்று யோசிக்கிறீர்களா? "
என் மக(னே)ளே, உனக்காக கவலைப்பட நான் இருக்கிறேன். உன் கவலைகளை மாற்ற நான் இருக்கிறேன்." என்று, இயேசு உங்களைப் பார்த்துச் சொல்கிறார்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (#பிலிப்பியர் 4:6,7). ஆமென்!! அல்லேலூயா!!!