இன்றைய வேத வசனம 26.04.2023: சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.... (#மத்தேயு 11:29)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நாம் அவரிடம் கற்றுக்கொள்ளம்படி வலியுறுத்தும் பிரதானமான காரியம் சாந்தமும் மனத்தாழ்மையுமே ஆகும்.
என்னைப்போல பிரசங்கிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் எங்கேயுமே கூறவில்லை. ஆனால், அவர் என்னிடமிருந்து மனத்தாழ்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
எருசலேம் நகரிலே தன்னை துப்புவதற்கும், அடிப்பதற்கும், குற்றம்சாட்டுவதற்கும் சிலுவையில் அறைவதற்கும் ஒப்புக்கொடுத்தார், அதாவது சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார்.
அந்தக் கிறிஸ்து இயேசுவின் தாழ்மையை தினம் தினம் அணிந்து கொள்ள முற்பட்ட சில பரிசுத்தவான்களின் கூற்றை காண்போம்!
வில்லியம் கெல்வி என்ற புகழ்பெற்ற தேவ மனிதர் தன்னைக் குறித்து கூறியதாவது, என்னைக் குறித்தே நானே ஒன்றும் யோசிக்காமல் இருப்பதே தாழ்மை என்று எண்ணுகிறேன். என்னைக் குறித்து சிந்திக்கும் அளவிற்கு என்னிடம் எந்த நன்மையும் இல்லை. நான் தவறு மிக்கவனாகவே இருக்கிறேன்! என்னை நான் மறந்து தேவனையே நோக்கி பார்க்க விரும்புகிறேன். என்றார்.
F.B மேயர் என்ற பரிசுத்தவான் எழுதிய புத்தகங்கள் இன்றும் அநேகரை பரிசுத்த வாழ்விற்கு நேராக வழிநடத்துகிறது.
ஒருமுறை அவர் தன்னைக் குறித்து கூறியதாவது, நான் ஒரு சாதாரண மனிதன் என்னிடத்தில் எந்த ஒரு வரங்களும் இல்லை. நான் பிரசங்கிக்க அறியாதவன் நான் அறிஞனும் அல்ல. சிந்தனை சிற்பியும்மல்ல. கிறிஸ்துவிற்கென்று நான் ஏதாவது செய்திருப்பேன் என்றால், அது என்னை நான் அவரிடம் ஒப்புக்கொடுத்தது மாத்திரமே! இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அதனைச் செய்ய நான் முயற்சி செய்வேன் என்றார்!
இவர் டி.எல் மூடியை குறித்து சொல்லும் போது, தன்னைக் குறித்து சொல்லப்பட்ட எந்த ஒரு புகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்டு, எந்த ஒரு சூழ்நிலையிலும் டி.எல் மூடி பெருமையாக நடந்து கொள்ளவே இல்லை! எனவே தேவன் அவரை பயன்படுத்தியதில் எந்த ஒரு வியப்புமே இல்லை என்றார்.
நண்பர்களே, இந்த தேவ மனிதர்களின் வார்த்தைகளை பார்த்தீர்களா? உங்களைக் குறித்து நீங்கள் எண்ணுவது என்ன? நம்மை குறித்து என்ன வேண்டியதற்கும் மிஞ்சி எண்ணுவது பெருமையாகும்!
நாம் பிரபலமடைய விரும்பாதவர்களாகவே வாழ முயற்சிக்க வேண்டும். எனவே, மற்றவர்கள் அறியாதபடி சேவை செய்வோம். அவர்கள் காணாதபடி உதவி செய்வோம். இதுவே தேவனுக்கு முன்பாக உண்மையான மேன்மை.
இறுதி வரை நம்மை ஒரு சாதாரண மனிதனாகவே பிறர் காணட்டும்! கிறிஸ்து சிலுவையில் தொங்கும் போது கூட சாதாரண மனிதனை போலவே வேதனையில் துடித்தாரே!
ஆம், தேவன் இறுதி வரைக்கும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். அவர் தன்னை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. தன்னை பிரபலபடுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. அவர் ஒரு சாதாரன மனிதனாகவே வாழ்ந்தார்.
இப்படி இருக்கும் போது நம்மை மேன்மையுள்ளவர்களாக காட்டிக் கொள்ள விரும்புவது நியாயமா? இன்றிலிருந்து, தேவனே எனக்கு மன தாழ்மையைக் கற்றுத் தாரும் என்று ஜெபிப்போம்! ஆமென்!! அல்லேலூயா!!!
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (#பிலிப்பியர் 2:8)