திலீபனின் ஊர்தி தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? கஜேந்திரனைக் கொல்வதற்கும் திட்டம் தீட்டிய பிக்குகள்?
தியாகியான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியை நேற்று(17) திருகோணமலையில் வைத்து இடைமறித்த சிங்கள காடையர்குழு அதன் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்ட சம்பவமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து நல்லூர் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்திப் பவனி 03 ஆம் நாளாக நேற்று திருகோணமலை நோக்கி பயணித்த போது கப்பல்துறைமுக பகுதியில் வைத்து சிறிலங்காவின் தேசியக்கொடியை தாங்கிய காடையர் குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம்(16) இரவே இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், நேற்று பகல் நினைவு ஊர்தியை வழிமறித்த காடையர்கள் அதன் மீது பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்கி அதனை சேதப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னால் வந்த செயற்பாட்டாளர்களின் வாகனத்தையும் அவர்கள் ஆக்ரோசமாக தாக்க முயற்சித்துள்ளனர்.
இந்த தாக்குதலை சிறிலங்காவின் உளவுத்துறையினரே திட்டமிட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலையில் பிக்கு தலைமைலயிலான குழு ஒன்றும் நேற்று முன்தினம் கஜேந்திரனை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாகவும், அதன் பின்னர் நேற்று இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.